மின்னுவதெல்லாம்..

செய்கூலி இல்லை. சேதாரம் இல்லை என்று அடிக்கடி ஊடகங்களில் நகைக்கடைகளின் விளம்பரங்கள் வருகின்றன. சேதாரம் இல்லாமல் நகைககள் செய்ய இயலுமா? நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏறிக் கொண்டிருக்கும் சமயத்தில் சேதாரத்திற்கான விலையை, வாங்குவோர் தலையில் சுமத்தாமல் நகைக் கடைகளே அந்தச் சுமையை  ஏற்றுக் கொள்ளுவது என்பது  சாத்தியமா? அப்படிப்பட்ட தியாகிகளா அவர்கள்? தங்களைத் தற்காத்துக்கொள்ள நுகர்வோர்கள் செய்ய வேண்டியது என்ன? இந்த விஷயங்களை ஆராயக் களம் இறங்கியது ‘புதிய தலைமுறை’.   

சேதாரம் என்றால் என்ன?

இயந்திரம் மூலமாகவோ, கைவேலைப்பாடாகவோ தங்கத்தில் நகைகள் செய்யும்போது சிதறும் அல்லது வீணாகும் தங்கமே சேதாரம் என்று சொல்லப்படுகிறது.

சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியுமா?  

முடியாது. சிறிது கூட தங்கம் வீணாகாத அளவுக்கு நகை செய்யும் அளவிற்குத் தொழில் நுட்பம்  முன்னேறியிருக்கிறது. ஆனால், அது இங்கு இன்னும் பரவலாகவில்லை. நகைசெய்யும்போது சேதாரம் வரத்தான் செய்யும்.

சேதாரம் எதில் அதிகம்? மனிதர் செய்வதிலா? இயந்திரம் செய்வதிலா?

பட்டறையில் மனிதர்களால் செய்யப்படும் நகைகளில்தான் சேதாரம் அதிகமாகும். இயந்திரங்களின் மூலம் மோல்டு செய்யப்படும் நகைகளில் அந்த அளவு சேதாரம் ஏற்படாது. எனினும் அந்த நகைகளை ஃபினிஷிங் செய்வது மனிதர்கள்தான். அப்போது சிறிய அளவில் சேதாரம் உண்டாகும். சேதாரம் டிசைன்களைப் பொருத்து மாறுபடும்.

கல் வைத்த நகைகள் செய்தால், சேதாரம் அதிகமாகுமா?

கல் நகைகள் செய்யும்போது அதிகளவில் சேதாரம் ஏற்படும். அதன் மீது செய்யப்படும் அதிக வேலைப்பாடு காரணமாக அதிகளவு சேதாரம் ஏற்படுகிறது.மோல்டிங், பின்னர் அளவு தட்டி ராவி சுத்தம் செய்தல், பம்பிங், கல் வைத்து செதுக்கல் எனப் பல நிலைகளை அந்த நகைகள் உருவாகும்போது சந்திக்கின்றன. இவையெல்லாம் ஒவ்வொரு இடத்தில் செய்யப்படும்போது ஒவ்வொரு இடத்திலும் ஏற்படும்.

916 கே.டி.எம். என்பது என்ன?

24 கேரட் உள்ள நகைகளே சுத்தத் தங்கம் அல்லது சொக்கத் தங்கம் எனப்படும். சுத்தமான தங்கத்தில் நகை செய்ய முடியாது. கொஞ்சம் செம்பு அல்லது காட்மியம் கலந்தால்தான் நகையாக்க முடியும். கிராம் தங்கத்தில் எவ்வளவு செம்பு/ காட்மியம் கலக்கப்படுகிறது என்பதைப் பொருத்து தங்கத்தின் சுத்தத் தன்மை மாறுபடுகிறது.

916 தங்கம் என்பது, 100 கிராம் தங்கத்தில் 91.6 கிராம் சொக்கத் தங்கம் இருக்கும். இதுவே 22 கேரட் ஆபரணத் தங்கமாகும். காட்மியம் என்பதன் சுருக்கமே, ‘கே.டி.எம்.’ இந்தக் காட்மியத்தை பயன்படுத்தித்தான் நகைகளை ஒட்ட வைக்கிறார்கள்.

தங்கம், வெள்ளி, செம்பு என்ற மூன்று உலோகக் கலவைகளின் பொடியால்தான் அந்தக்காலத்தில் நகைகளை ஒட்டி வந்தார்கள். இவ்வாறு ஒட்டப்பட்ட நகையை உருக்கும்போது கிடைக்கிற தங்கம் சுத்தமாக இருக்காது. ஆனால், காட்மியம் உபயோகித்து ஒட்டிய தங்க நகையை உருக்கும்போது சுத்தமான தங்கம் கிடைக்கிறது. ஒட்டி முடித்தவுடன் காட்மியம் ஆவியாகிவிடுவதே இதற்குக் காரணம். ஆனால், சில நாடுகளில் கே.டி.எம். தடை செய்யப்பட்டிருக்கிறது. இது ஒரு ரசாயனம்.

ஹால்மார்க் என்பது என்ன?

விற்பனைக்கு வரும் நகைகள் தரமான தங்கத்தில் செய்யப்பட்டதுதானா எனச்சோதித்து, அதற்கு முத்திரையிடும் பணியை இந்திய தர நிர்ணய அமைப்பு செய்கிறது. அப்படி இடப்படும் முத்திரைக்குப் பெயர்தான் ஹால்மார்க். ஆனால், இந்த ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்படாததால், ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகளும் முத்திரை இல்லாத மற்ற நகைகளும் ஒரே கடையில் விற்கப்படுகின்றன. ஆனால், அந்தக் கடை ஒட்டுமொத்தமாக இது ஹால்மார்க் முத்திரைக் கடை என்று தனது கடையை விளம்பரப்படுத்திக் கொள்கிறது. எனவே, எந்தெந்த நகைகள் ஹால்மார்க் முத்திரையுடன் உள்ளன என்பதை விழிப்புடன் பார்த்து வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும்

ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளிலும் கூட பல இடங்களில் ஏமாற்று வேலை நடப்பதாகச் சொல்லப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தர நிர்ணய அமைப்பு, நாடு முழுக்க உள்ள நகைக் கடைகளில் 120 தங்க நகைகளை எடுத்து சோதனை செய்தது. இதில் 14ல் மட்டுமே சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் சொன்ன அதே தரம் இருந்தது. இதைத் தொடர்ந்து நுகர்வோருக்கு தரமான தங்க நகைகள் கிடைப்பதை உறுதி செய்ய, தேசிய அளவில் பிரத்யேகக் கமிட்டி அமைய வேண்டும் என்று பேச்சு கிளம்பியது. ஆனால், இன்றுவரை அது செயல்வடிவம் பெறவில்லை.

வெளிநாடுகளில் தங்கத்தின் தரம் எப்படி?

பல நாடுகளில் தரம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே நகைகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.  மொத்த வியாபாரிகள், தொழிற்சாலைகளிலிருந்து நகைகள் வாங்கும்போது அதில் ஏதேனும் ஒரு நகையின் தரத்தை சோதனை செய்து, பின்னர் வாங்குவதே அமீரகத்தில் நடந்துகொண்டிருக்கும் வழக்கம்.

அமீரக அரசாங்கத்தின் தங்கக் கட்டுப்பாட்டு வாரியம் மூன்று மாதத்திற்கொருமுறை ஒவ்வொரு கடைக்கும் வருகை தந்து, அங்குள்ள நகைகளில் சிலவற்றை இவர்களின் பரிசோதனைக்கு எடுத்துச் செல்வார்கள். அப்படி எடுத்துச் செல்லும் நகைகளில் தரம் குறைவாக இருந்தால், அந்த நகைகள் அனைத்தையும் உருக்குவதற்கு கட்டளையிடுகிறார்கள். இரண்டாம் முறையும் தரம் குறைவு என்றால், அபராதமும் ஒரு மாத காலம் கடையடைப்பும் செய்வார்கள். மூன்றாம் முறை கடையின் லைசென்சை ரத்துசெய்து விடுவார்கள். இந்தக் கட்டுப்பாட்டினால் தங்கத்தின் தரம், அமீரகத்தில் இன்றுவரையில் தலைதூக்கி சர்வதேசச் சந்தையில் பெயரும் பெற்றுவருகிறது.

சேதாரம் அதிகம் வாங்கினால், நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகாரளிக்க முடியுமா?

சேதாரம் அதிகம் வாங்கியதாக நேரடியாக குறைதீர்மன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது. ஆனால், 916 என்று கூறுவார்கள். ஆனால், 91.6 டச்சுக்குப் பதிலாக 85 டச்தான் இருக்கும். அதுபோன்ற சமயங்களில் அதை ஆதாரத்துடன் குறைதீர்மன்றத்தில் புகாரளித்து தீர்வு காணலாம். தங்கத்தின் தரத்தை ஆய்வகத்தில் கொடுத்து, சான்றிதழ் வாங்கி அதனை ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.

இங்கு உடனடியாக என்ன செய்யலாம்?  

புதுச்சேரியில் நகை விற்பனை செய்யப்படும்போது வழங்கப்படும் ரசீதில் சேதாரம், செய்கூலி ஆகியவற்றைத் தனித்தனியாக குறிப்பிட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி, மனிதத் தன்மை நுகர்வோர் மைய அமைப்பின் தலைவர் உத்திரேஸ்வரன் புதுவை முதல்வரிடம் மனு கொடுத்துள்ளார். அதில், ‘புதுச்சேரியில் உள்ள நகைக் கடைகளில் நகை விற்கும்போது அவர்கள் கட்டாயமாக பி.ஐ.எஸ். ஹால்மார்க் முத்திரை வாங்கி, பில்லில் குறிப்பிட வேண்டும். அவர்கள் அளித்த துல்லிய எண்ணையும் குறிப்பிட வேண்டும். அதேபோல் பில்லில் நகை வாங்குபவர்கள் எவ்வளவு எடை நகை வாங்குகிறார்கள், அதற்குரிய தொகை எவ்வளவு, நகைக்கான கூலி எவ்வளவு, வரிகள் எவ்வளவு என்பதையும் தனித்தனியாகக் குறிப்பிட வேண்டும். எஸ்டிமேட் பில்களை உபயோகிக்க அனுமதிக்கக் கூடாது. இதனால், அரசுக்கு வர வேண்டிய வருவாய் பாதிக்கப்படும். இவ்வாறு எஸ்டிமேட் பில்களை உபயோகிக்கும் நகைக் கடையின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதை நாடு முழுக்கப் பின்பற்றலாம்.

உலகிலேயே அதிக அளவில் தங்க ஆபரணங்களைப் பயன்படுத்துபவர்கள் இந்தியப் பெண்கள். இந்த நிலையில் தங்கத்தின் விலையைக் கட்டுக்குள் வைப்பதும், தரமான தங்கத்தால் செய்யப்பட்ட நகைகள் சந்தைக்கு வருவதை உறுதி செய்வதும் அரசின் கடமையாகும்.

பின்னூட்டமொன்றை இடுக